கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்2, லைகா புரடக்ஷன் தயாரிக்கிறது, இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் விஷயத்தில் பிரச்சனை இருந்து வந்தது, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பட்ஜெட்டை குறைத்தால் தான் ஷூட்டிங் தொடர முடியும் என்று பட நிறுவனம் நிபந்தனை விதித்தது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு பட்ஜெட்டை குறைத்தார் ஷங்கர். அதன்பின் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீர் விபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டது.
அதற்குக் கோடிகளில் பட நிறுவனம், இயக்குனர், ஹீரோ கமல் ஆகியோர் தந்தனர். பிறகு கொரோனா காலகட்ட தடையால் படப்பிடிப்பு தடைபட்டது. கொரோனா தளர்வுக்கு மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இயக்குனர் ஷங்கர் தயாரானார். மீண்டும் பட்ஜெட்டை குறைக்கத் தயாரிப்பு நிறுவனம் கூறியது. அதை ஷங்கர் ஏற்க மறுத்தார். இதனால் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாமல் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.காத்திருந்து பார்த்த ஷங்கர், இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்காவிட்டால் தான் வேறு படம் இயக்க செல்லவிருப்பதாக லைகா நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினார். அப்போதும் பட்ஜெட் குறைக்க வேண்டும் என்பதில் நிறுவனம் உறுதியாக இருந்தது.
இதையடுத்து ஷங்கர் வேறு படம் இயக்க முடிவுசெய்தார். ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க முடிவானது. தில் ராஜு தயாரிக்கிறார்.இயக்குநர் ஷங்கர், ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம் இந்தியத் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரானதில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடக்க விவரம், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் பட பட்ஜெட் விஷயத்தில் பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதில் தயாரிப்பாளர் ராஜு உறுதியாக இருக்கிறார். இதற்காக இயக்குனர் ஷங்கருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்கு மேல் இப்படத்தின் பட்ஜெட் தொகை அதிகரிக்கக்கூடாது என்று கூடுதலாக ஒப்பந்தத்தில் ஒரு கண்டிஷன் போடப்பட்டுள்ளது. அதில் ஷங்கர் கையெழுத்திட்டிருக்கிறாராம்.இதுவரை ஏற்காத வேடத்தை ராம் சரண் ஏற்க உள்ளாராம். அத்துடன் சமூக கருத்தும் உள்ளடங்கி இருக்கும். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்த 2022ம் ஆண்டு படம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.