கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா நாளை சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்ரீ லியோ முத்து உள்ளரங்கத்தில் நடக்கிறது. பின்னர் மாலையில் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதுமிருந்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் ஏ.ஜி.மவுரியா, சந்தோஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீபிரியா, கமிலா நாசர், கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், பொன்னுசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினி காந்த் உடல் நலம் குறித்து விசாரித்ததாகத் தெரிகிறது. பின்னர் இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது.ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் எனது நண்பர் அவர் உடல் நலம் முக்கியம். அவரை சந்தித்து எனக்குத் தேர்தலில் ஆதரவு தரும்படி கேட்பேன் என ஏற்கனவே கமல்ஹாசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் தருவாரா என்பது பின்னர் தான் தெரியவரும்