இந்தியில் ரீமேக் செய்யப்படும் விக்ரம் வேதா படத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் அதிலிருந்து விலகியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
2017ம் ஆண்டு புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன் இருவரது நடிப்பும், சாம் சி.எஸ்.ஸின் இசையும், கதை சொல்லப்பட்டவிதமும் படத்துக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. அப்போதே இந்தியில் இதனை ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். இயக்கம் அதே புஷ்கர் - காயத்ரி. விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க அமீர்கானும் ஒத்துக் கொண்டார்.
அமீர்கானின் பிகே, சீக்ரெட் சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட படங்கள் சீனாவில் வசூலில் பட்டையை கிளப்பியதால், விக்ரம் வேதாவையும் சீனாவில் வெளியிட அமீர்கான் விரும்பினார். அதன்படி அவர் புஷ்கர் காயத்ரியிடம் கோரிக்கை ஒன்றையும் வைத்தார். அது என்னவென்றால், சீன ரசிகர்களை கவர, வடசென்னையில் எடுக்கப்பட்ட விக்ரம் வேதாவின் கதையை ஹாங்காங்குக்கு மாற்றச் சொன்னார்.
ஹாங்காங் பின்னணி என்றால், அதிக சீன ரசிகர்களை எளிதாக கவர முடியும் என நினைத்து அப்படிச்சொன்னார் அமீர்கான். சரி என்று அமீர்கானின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட புஷ்கர் காய்த்ரி படத்தை அவர் கூறியபடியே மாற்றினார். அந்த நேரம் தான் வூகானில் கொரோனா தொற்று பரவி, நாடுகளுக்கிடையிலான எல்லைகள் சீல் வைக்கப்பட்டன.
ஹாங்காங் திட்டம் நிறைவேறவில்லை. அங்கு செல்ல முடியாமல் போனது. அப்படியென்றால் எனக்கு விக்ரம் வேதா படம் வேண்டாம் என்று கூறி படத்திலிருந்து விலகினார்.
இப்போது மாதவன் நடித்த விக்ரம் வேடத்தில் சயிப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த வேதா வேடத்தில் ரித்திக் ரோஷனும் நடிக்க உள்ளனர். இதில் இன்னொரு முக்கிய அம்சம், அமீர்கானுக்கு முன்பு தயாரிப்பு தரப்பு அணுகியது ரித்திக் ரோஷனை தான்.
அப்போது அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் தர இயலாமல் போனது. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் இப்போது ரித்திக் ரோஷன் ஓய்வாக இருக்கிறார். அதனால், உடனே கால்ஷீட் தந்திருக்கிறார்.