ஷங்கர் இயக்கத்தில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு ரஜினியின் 2.0 படம் திரையரங்கில் ஆட்சி செய்கிறது.
கிராபிக்ஸ் கம்பெனிகள் காலம் தாழ்த்தினாலும், கிராபிக்ஸ் வேலைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் செலவானாலும் பரவாயில்லை என பக்கா சிஜியுடன் படம் உருவாக வேண்டும் என ஷங்கர் உழைத்திருப்பது ஃபிரேமுக்கு ஃபிரேம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
2.0 படம் வெளிவருவதற்கு முன்னர், பாலிவுட்டில் இருந்த அளவுக்கு கூட தமிழ்நாட்டில் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல படம் வெளியான பிறகு தற்போது, படத்தை பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டர்களில் அணி திரள உள்ளதும் நிதர்சனம் தான். காலை 4 மணிக் காட்சிக்கு மற்ற ரசிகர்கள் படம் என்றால் இளைஞர்கள் மட்டும் தான் தியேட்டரில் திரள்வார்கள். ஆனால், சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் என்பதால் இளைஞர்கள் மட்டுமில்லாமல், பெண்கள், குழந்தைகள், வயதானோர் என குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வருகை தருவதை காண முடிந்தது.
ஷங்கர் இந்த வாட்டியும் தனது மேஜிக்கை இன்னும் பிரம்மாண்டமாய் நிரூபித்துள்ளார்.
நம்பர் 1, நம்பர் 2 கேம்லாம் பாப்பா கேம்.. நான் எப்பவுமே ஒன் அண்ட் ஒன்லி என ரஜினி சொல்லும் வசனம் ஷங்கருக்கும் அப்படியே பொருந்தும். இந்திய சினிமாவே பெருமையடையும் அளவிற்கு பிரம்மாண்ட சினிமாவாக சொதப்பாமல் 2.0 வெளியாகியுள்ளது சூப்பரான விசயம்.
3டி எபெக்ட்ஸ்கள் டைட்டில் கார்டு முதல் நம் கண்முன்னே செய்யும் மேஜிக்கெல்லாம் ஹாலிவுட் படங்களில் கூட நாம் பார்த்திருக்க முடியாது. 4டி சவுண்ட் எஃபெக்ட் திரையில் காட்சிகள் நகராமல் நம் அருகில் காட்சிகளையும் வசனங்களையும் காதுக்கு அருகில் வந்து கூறி, நம்மை மிரள வைக்கின்றன. மொபைல் போனை இனியும் பயன்படுத்த வேண்டுமா என சிந்திக்கவும் வைக்கின்றன.
2.0 கதைக் களம்:
பறவைகளை நேசிக்கும் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார், ஆரம்ப காட்சியிலேயே செல்போன் டவர் மீது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கடுத்து, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் செல்போன்கள் மாயமாகின்றன. செல்போன் நெட்வொர்க் முதலாளிகள் அந்நியன் படத்தில் கொல்லப்படுவது போல மிகவும் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இதனால், அரசாங்கம் என்ன செய்வது என்றே தெரியாமல் டாக்டர் வசீகரனின் உதவியை நாடுகின்றனர். அவரும் சிட்டியை மீண்டும் அசம்பிள் செய்கிறார். இருவருக்குள்ளான பாசப் போராட்டம் கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்.
சிட்டியால் பறவை அரக்கனை அழிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், ரெட் சிப்பை பொருத்தி 2.0வை வெளியே கொண்டு வருகின்றனர். வெளியே வரும் 2.0 தனது பழைய மேனரிசத்தை மேலும் 10 மடங்காக காட்டுகின்றது. ஆனால், அதனாலும் வில்லனை தடுக்க முடியவில்லை. இறுதியில், வில்லனின் நெகட்டிவ் எனர்ஜியை எதிர்கொள்ளும் அளவிற்கு ஒரு புதிய டெக்னாலஜியுடன் 3.0 உருவாக்கப்படுகிறது.
ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களை படத்தில் 3.0 அள்ளித் தருகிறது. இறுதியில் பறவை அரக்கனை 3.0 அழித்ததா? சாதுவான தாத்தா அக்ஷய் குமார் ஏன் இவ்வளவு பெரிய கொடூர வில்லனாக மாறுகிறார். ஆரோ என்றால் என்ன? நெகட்டிவ் எனர்ஜி என்ன செய்யும் என பல கேள்விகளுக்கு கிளைமேக்ஸில் ஷங்கர் விடையளித்து ஒரு கனகச்சிதமான சைஃபை ரோபோ எண்டர்டெயினர் படத்தை படைத்து தனது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என நிரூபித்துள்ளார். மேலும், 3.0 படத்திற்காக இப்போதே ரசிகர்களை ஏங்கவும் வைத்துள்ளார்.
இந்த வயதிலும் ரஜினி என்னும் நடிப்பு ராட்சசன், தனது உடலை வருத்தி இப்படி நடிப்பதெல்லாம் அபாரம். என்னதான் டூப் போட்டாலும், ரஜினி முகத்தை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு எழும் எனர்ஜி வேற லெவல்.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டியின் இசை அர்ப்பணிப்பு படத்தினை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.
கிராபிக்ஸ், பொம்மை படம் இல்லை 2.0 எல்லோரும் பார்த்து வியக்கும் அளவிற்கு வொர்த்தான சினிமாவை மீண்டும் ஷங்கர் இயக்கியுள்ளார்.
போட்ட பணத்தை படம் வசூலிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், வசூல் செய்யும் அளவுக்கு படம் வொர்த்துதான்.
2.0 ரேட்டிங்: 3.75/5.