நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டி தொடர்பாக இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது போட்டியும் சென்னையில்தான் நடக்கிறது. 3 மற்றும் 4-வது போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. அதற்கு பின்னர், டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், ஒருநாள் தொடர்கள் புனேவிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டி தொடர்பாக இந்திய அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய வீரர்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் முன்புபோல அசத்தலான பார்மில் இல்லை தான். இருந்தாலும் விக்கெட்டை எப்படி வீழ்த்த வேண்டும் என்ற சூட்சமத்தை அறிந்தவர் என்றார். ஜேம்ஸ் ஆண்டர்சன் சீமை கூர்ந்து கவனித்து பிராண்ட் ஃபூட்டில் ஆட வேண்டும். ஆண்டர்சன் பந்துவீசும்போது கிரீஸை விட்டு வெளியே வந்து ஆடினால் அவரது ரிதமை நம்மால் டிஸ்டர்ப் செய்ய முடியும் என்றார்.
மேலும், இலங்கை அணிக்கு எதிராக ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு வயதே ஆகவில்லை என்று தான் தோன்றுகிறது. 40 வயதை நெருங்கியிருந்தாலும் அவர் களைப்பில்லாமல் தான் விளையாடுகிறார் என்றும் நெகிழ்ச்சியாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.