நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா.. ப.சிதம்பரம் பங்கேற்பு

by எஸ். எம். கணபதி, Dec 5, 2019, 12:51 PM IST

வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது நாடு முழுவதும் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டு, கிலோ ரூ.140 வரை உயர்ந்து விட்டது. வெங்காய லாரி கடத்தல், நிலத்தில் இருந்து வெங்காயம் கொள்ளை என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், வெங்காய விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு தவறி விட்டதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இன்று காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தவறி விட்டதாக கூறி, கோஷங்கள் எழுப்பினர்.

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் 105 நாட்கள் திகார் சிறையில் இருந்து நேற்றிரவு விடுதலையான முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்பட தமிழக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


More Delhi News

அதிகம் படித்தவை