டெல்லி வன்முறைக்கு இதுவரை 34 பேர் பலி.. அமைதி திரும்புகிறது..

by எஸ். எம். கணபதி, Feb 27, 2020, 13:40 PM IST

டெல்லியில் இன்று அமைதி திரும்பியுள்ளது. கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.டெல்லியில் ஷாகீன்பாக் என்ற இடத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) எதிர்த்துக் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரும் சமயத்தில், கடந்த 23ம் தேதியன்று ஜாப்ராபாத், மவுஜ்புர் உள்ளிட்ட மேலும் சில இடங்களில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

இதையடுத்து, கபில் மிஸ்ரா என்ற பாஜக பிரமுகர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த டிவிட்டரில் அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து சிஏஏ ஆதரவு போராட்டம் தொடங்கியது. அப்போது சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. நான்கு நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்களில் இன்று வரை 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் கலவரம் நடந்த ஜாப்ராபாத், மவுஜ்புர், சந்த்பாக், கோகுல்புரி போன்ற இடங்களில் இன்று அமைதி திரும்பியுள்ளது. அங்குக் கலவரங்களின் போது ஏற்பட்ட வீசப்பட்ட கற்கள், எரிக்கப்பட்ட பொருட்கள், சேதமடைந்த பொருட்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

டெல்லி சிறப்புக் காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா உள்பட மூத்த அதிகாரிகள் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீவத்சவா கூறுகையில், டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியவர்கள், கலவரங்களில் ஈடுபட்டவர்களை சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு அடையாளம் கண்டு வருகிறோம். விரைவில் வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைது செய்வோம் என்றார்.

READ MORE ABOUT :

More Delhi News