பயணியர் விமானமா..? மாட்டு வண்டியா..? தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் திக்.. திக்.. அனுபவம்!

பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

Indigo Airlines

 

கடந்த புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 70 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. அப்போது விமானத்தில் ஏதோ கோளாறு. கம்ப்யூட்டரில் சிறு கோளாறு தான் என்று கூறி விமானத்தை ரன்வேயில் ஓட்டியபோது மாட்டு வண்டி போல் குதித்து, குதித்து ஓடி பாதி ரன்வேயில் நின்று விட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியுள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு இழுத்து வந்து பார்த்தபோது இஞ்சினில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது தனியார் விமான நிறுவனம் .

இதன் பின்னர் பயணிகளுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யாமல் மறுநாள் விமானத்தில் செல்லலாம் / இல்லையெனில் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் சொல்லியுள்ளனர். இதனால் அவசரமாக வெளிநாடு, வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பதற்றப்பட்டுள்ளனர்.

வேறு வழியின்றி பயணிகள் தங்கள் சொந்தச் செலவில் கார், டிராவல்ஸ் எனப்பிடித்து மதுரை, சென்னை என அவசர அவசரமாக செல்ல வேண்டியதாகிவிட்டது.

பழுதான விமானத்தை மாட்டு வண்டி போல் ஓட்ட முயன்ற சம்பவம், ரத்து செய்த பின் அதிகாரிகள் காட்டிய அலட்சியம் பயணிகளை அச்சமடையச் செய்துவிட்டது .இப்படிப்பட்ட தனியார் நிறுவன விமானத்தை நம்பி எப்படி பயணிக்க முடியும் என திக்.. திக்.. திகிலில் உறைந்த பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.