திருச்சி காவிரி ஆற்றில் வேகமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகள் அடித்து செல்லப்பட்டதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஏற்கெனவே இந்த வெள்ளத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இரும்புபாலம் தரைமட்டமானது.
இந்நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போதைய நிலவரப்படி காவிரி ஆற்றில் சுமார் 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.
மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.