கரூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை, பரமத்தி பவித்ரம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு நாள்தோறும், நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஜல்லி லோடுகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள விநாயகா ப்ளூ மெட்டல் குரூப் உள்ளிட்ட ஐந்து கல்குவாரிகளில் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பேரில் திருச்சி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து கல்குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர், கோவை சாலையில் வசந்தம் நகரில் உள்ள கல்குவாரி மற்றும் சிறப்பு அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்த சோதனையில் வருமானவரி தரப்பில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.