கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷின் மனைவி அஸ்வினி கடந்த 1ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை மூலம் அஸ்வினிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
2 தினங்கள் கடந்த நிலையில், அஸ்வினி உடல்நிலை குறித்து பரிசோதித்த செவிலியர், வேகமாக நடக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். ஏன் என்று கேட்ட போது, அஸ்வினிக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேசன் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அஸ்வினி மற்றும் ராஜேஷ், மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
அனுமதி பெற்று தான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாக, அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அதிர்ச்சியில் உறைந்த தம்பதி, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. தம்பதிக்கே தெரியாமல் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் கடலூர் நகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.