டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலியானதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கே காரணம் என்று எம்எல்ஏ சுதர்சனம் குற்றம்சாட்டி உள்ளார்.
மாதவரம் தணிகாச்சலம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார். தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கஜலட்சுமி. இவர்களுக்கு தட்சன், தீக்ஷா என்ற ஒரு ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் இருந்தனர்.
இருவரும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவரையும் மாதவரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் ரத்த மாதிரியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலியானதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கே காரணம் என்று மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து, சுதர்சனம் எம்எல்ஏ கூறியதாவது: மாதவரம் தொகுதிக்குட்பட்ட பொன்னியம்மன் மேடு, பிரகாசம் நகர், தணிகாசலம் நகர், மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள குடியிருப்பு இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் எத்தனையோ முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குழந்தைகள் பலியானதற்கு அவர்களின் மெத்தனபோக்கே காரணம். இனியும் சுகாதாரப்பணிகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால் அறப்போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.