போலி வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதுகுறித்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் கீரிப்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் நடராஜன். இவர் மீது போட்டோ கடை நடத்தி வரும் எனது சகோதரர் மஞ்சுநாத் ஊழல் புகார் கூறி போலீஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். இதனால், ஆத்திரம் அடைந்து கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த எனது சகோதரர் மீது இன்ஸ்பெக்டர் நடராஜன், கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனால், நடராஜனுக்கு ரூ.2 லட்சமும், வீரமுத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் அபராதமாக விதித்தார். மேலும், இந்த தொகையை மஞ்சுநாத்துக்கு வழங்க வேண்டும் என்றும் இதை அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.