சர்கார் பட விவகாரத்தில் முந்தைய திமுக அரசு செய்தது போன்ற செயல்களில் அதிமுக அரசு ஒருபோதும் ஈடுபடாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முதியோர் தின விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு ,
முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே ஓய்வூதியத்திட்டம், முதியோர் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது.
சிறந்த நடிகரான விஜய், ஜெயலலிதா இருந்த சமயம் அதிமுகவின் கூட்டங்களில் பங்கேற்றதோடு, அரசின் இலவச பொருட்களை மக்களுக்கு வழங்கி, வாழ்த்தி பேசியுள்ளார்.
ஆனால் தற்போது வெளியாகிருக்கும் சர்கார் படத்தில் இதற்கு முற்றிலும் மாறாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நடித்த விஜயையும், இயக்குநரையும் ஒரு போதும் மன்னிக்க முடியாது. முந்தைய திமுக ஆட்சி காலத்தில் தொலைக்காட்சியை இலவசமாக வழங்கிய அரசு ரூ.100 வீதம் மக்களின் பணத்தை கொள்ளையடித்தனர்.
இதே போல் ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தின் தொலைக் காட்சி உரிமம் தொடர்பான விவகாரத்தில் படம் வெளியாகும் முன்பே திமுகவினர் அந்தப் படத்தை சிடியில் வெளியிட்டனர். இதுபோன்ற செயல்களில் அதிமுக அரசு ஒருபோதும் ஈடுபடாது என்று தெரிவித்தார்.