சென்னை, மயிலாப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கைமாற்றப்பட இருந்த கடத்தல் தங்கம், ஹவாலா பணத்தை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் ஹவாலா பணம் கைமாற்றப்பட இருப்பதாகவும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டலில் சாதாரண வாடிக்கையாளர்கள் போல் நுழைந்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, தொழிலதிபர் ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து கண்காணித்து வந்ததில், தொழிலதிபர் பெரிய தோல் பை ஒன்றை எடுத்துக் கொண்டு கார்கள் நிறுத்துமிடத்திற்கு விரைந்தார். அப்போது, அதிகாரிகள் தொழிலதிபரை சுற்றி வளைத்து பையை சோதனை செய்தனர்.
அப்போது, பையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்ததில், ஓட்டலில் தங்கியுள்ள தென்கொரியாவை சேர்ந்த 2 பேரிடம் இருந்து தங்கம் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தென்கொரியாவை சேர்ந்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும், தொழிலதிபருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தங்கக்கட்டிகள், ஹவாலா பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், மொத்தம் ரூ.11 கோடியே 16 லட்சம் ஹவாலா பணமும், 7 கிலோ தங்க கட்டிகளும் பிடிபட்டது. மேலும், தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 20 லட்சம் ஆகும். தங்கம், ஹவாலா பணம், கார் உள்பட அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொழிலதிபர், அவரது ஊழியர்கள், தென்கொரிய நபர்கள் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர்.