கஜா புயல் சேதத்தால் தொடரும் விவசாயிகளின் தற்கொலை முடிவு ! தஞ்சையில் சோகம்

Farmer suicide in Tanjavur

by Isaivaani, Dec 3, 2018, 09:01 AM IST

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கத்தால் 2 ஏக்கர் கரும்பு சேதமடைந்ததை அடுத்து மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர், தோழகிரிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சாமிகண்ணு (55). குருங்குளம் சர்க்கரை ஆலையில் உதவியாளராக பணியாற்றி வந்த சாமிகண்ணு, பின்னர், பள்ளி வாகனத்தில் நடத்துனராக இருந்து வந்தார்.

சாமிக்கண்ணு தனக்கு சொந்தமான வயலில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். தனது மகளின் திருமணம், மகனின் படிப்புக்காக சுமார் ரூ.16 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

இதனால், கரும்பு சாகுபடி செய்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் கடனை அடைத்துவிடலாம் என்று சாமிகண்ணு நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால், கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் 2 ஏக்கர் கரும்புகள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், அதிச்சியடைந்த சாமிகண்ணு கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்று தெரியாமல், மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சாமிகண்ணுவை நேற்று அதிகாலையில் இருந்து காணவில்லை. இதனால், அக்கம் பக்கத்திலும், சாமிகண்ணு வழக்கமாக செல்லும் இடங்களிலும் தேடி பார்த்தனர். அப்போது, தனது கரும்பு தோட்டத்தில் சாமிகண்ணு விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சாமிகண்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஜா புயலின் தாண்டவத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதித்துள்ள நிலையில், மனவேதனையில் அவர்கள் தற்கொலை செய்துக் கெள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

You'r reading கஜா புயல் சேதத்தால் தொடரும் விவசாயிகளின் தற்கொலை முடிவு ! தஞ்சையில் சோகம் Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை