தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல் மின்நிலையம் கட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால், அதிலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் அப்பகுதியிலுள்ள நீர்நிலைகளை மாசுபடுத்துவதோடு, பனை வெல்ல தொழிலையும் பாதிக்க வாய்ப்பிருப்பதால் அத்திட்டத்தை கைவிடும்படி உத்தரவிடக் கோரி தூத்துக்குடியை சேர்ந்த பி. ராம்குமார் ஆதித்தன் என்ற வழக்குரைஞர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கே.கே. சசிதரன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோரை கொண்டிருந்த அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது. மனுதாரர் ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகிய நிலையில், மனு செய்யவேண்டிய ஆறு மாத காலகட்டத்தை தாண்டி மனுதாரர் வந்துள்ளார் என்று கூறி அங்கும் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.