ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்தது தொடர்பான விவகாரத்தில் தில்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 20 பேர்களை தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், 2015, மார்ச் 13-இல் ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றச் செயலர்களாக நியமிக்கும் உத்தரவை தில்லி அரசு பிறப்பித்தது.
சம்பந்தப்பட்ட 21 எம்எல்ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் சார்பில் 2016, ஜூன் 9-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ‘துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை சட்டமன்ற செயலராக நியமித்த நடவடிக்கை சட்ட விரோதமானதாகும். இதனால், இது தொடர்பான முதல்வரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று நீதிமன்றம் 2016, செப்டம்பரில் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரஜௌரி கார்டன் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினர் ஜர்னைல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 20 எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடர்ந்தது.
சட்டமன்ற செயலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், தங்கள் மீதான ஆதாயப் பதவி விவகார வழக்கு விசாரணையை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்தப் பின்னணியில் விசாரணை முடிந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆம் ஆத்மி எல்ஏக்கள் 20 பேரையும், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும், இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையம் பரிந்துரையை அளித்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையினை உண்டாக்கி இருப்பதுடன், தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு எதிராக இந்த நடவடிக்கையை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.