1984ல் சீக்கியர்கள் மீது தாக்குதல்.. கமல்நாத் மீது கலவர வழக்கு!

Trouble for Madhya Pradesh CM Kamal Nath as MHA to reopen 1984 riot cases

by எஸ். எம். கணபதி, Sep 10, 2019, 09:13 AM IST

இந்திரா காந்தி கொலைக்கு எதிரொலியாக டெல்லியில் நடந்த சீக்கியர் கலவரம் தொடர்பாக, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, அவரது பாதுகாவலர்கள் சத்வந்த்சிங், பியாந்த்சிங் ஆகியோரால் பயங்கரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதற்காக இந்திராகாந்தியை கொன்றதாக கூறப்பட்டது.

இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து டெல்லியிலும், பஞ்சாப்பிலும் சீக்கியர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் நடந்தன. இதில், 3,325 கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக டெல்லி போலீசார் பதிவு செய்த 241 வழக்குகள், சாட்சிகள் இல்லாமல் பின்னாளில் முடிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் காங்கிஸார் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தன. அதன்பிறகு, நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டு, அந்த கமிஷன் 4 வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க பரிந்துரை செய்தது.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டில் மோடி அரசு பொறுப்பேற்றதும், ஜி.பி.மாத்தூர் கமிட்டி பரிந்துரையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. இந்த குழு தற்போது 7 வழக்குகளை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. அதில் ஒரு எப்.ஐ.ஆரில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ராகாப்கஞ்ச் குருத்வாரா அருகே நடந்த கலவரத்தில் ஈடுபட்ட கும்பலில் கமல்நாத்தும் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த கலவரம் தொடர்பாக 1984ம் ஆண்டில் போடப்பட்ட வழக்கில், கமல்நாத் பெயர் இடம்பெறவில்லை. மேலும் சாட்சிகள் இல்லாததால் பின்னாளில் வழக்கு முடிக்கப்பட்டிருந்தது. தற்போது கமல்நாத் மீது சிறப்பு புலனாய்வுக் குழு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. மேலும், இந்த கலவர வழக்கில் சாட்சி சொல்ல அப்போது நிருபராக பணியாற்றிய சஞ்சய் சூரி என்பவர் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் இங்கிலாந்தில் வசிக்கிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டில் இதே சீக்கியர் கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன்குமாருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading 1984ல் சீக்கியர்கள் மீது தாக்குதல்.. கமல்நாத் மீது கலவர வழக்கு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை