திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். கார்த்தி சிதம்பரமும் அவர்களுடன் சென்றிருந்தார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்தது. மேலும், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் சிதம்பரம் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இம்மாதம் 1ம் தேதி முதல் அவர் திகார் சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் இன்று காலை திகார் சிறைக்கு சென்றனர். அங்கு மனு கொடுத்து அனுமதி பெற்று ப.சிதம்பரத்தை சந்தித்தனர். அவர்களுடன் சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் சென்றிருந்தார்.
சிதம்பரத்திடம் உடல்நலம் விசாரித்து விட்டு, சோனியா சார்பில் சில கருத்துக்களையும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், காஷ்மீர் உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள், பொருளாதார சரிவு போன்ற விஷயங்களிலும் சிதம்பரத்தின் ஆலோசனைகளை அவர்கள் கேட்டதாக தெரிகிறது. அரை மணி நேர சந்திப்புக்கு பின், அவர்கள் திரும்பிச் சென்றனர்.