திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள், சிறப்பு நீதிமன்றம் மற்றும் டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடியாயின. தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரியுள்ளார்.
இந்நிலையில், திகார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு இன்று(அக்.5) மாலையில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின், இரவு 7 மணிக்கு அவர் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.