இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது.. இது வரை 62 பேர் பலி..

Indias Covid-19 cases go up to 3k, largely driven by Tablighi Jamaat attendees.

by எஸ். எம். கணபதி, Apr 4, 2020, 10:27 AM IST

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3,066 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டுமே 647 பேர். இது வரை இந்நோய்க்கு 62 பேர் பலியாகியுள்ளனர்.


சீனாவில் கடந்த டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் என்னும் கொடிய தொற்று நோய் இப்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்தான் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தாய்லாந்து பிரதிநிதிகள் மூலமாக கொரோனா பரவியது தெரிய வரவும், நாடு முழுவதும் அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 14 மாநிலங்களில் அவர்களைப் பரிசோதித்ததில் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, தமிழ்நாட்டில் 411 பேருக்கும், டெல்லியில் 386 பேருக்கும், தெலங்கானாவில் 229 பேருக்கும், உ.பி.யில் 174 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

டெல்லியில் நேற்று(ஏப்.3) மட்டும் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 102 பேருக்குப் பாதிப்பு தெரியவந்தது. டெல்லியில் 259 பேரும், தமிழ்நாட்டில் 364 பேரும் தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல், நாடு முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 26 பேர் இறந்துள்ளனர்.

You'r reading இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது.. இது வரை 62 பேர் பலி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை