பிறமாநில தொழிலாளர்களுக்கு உ.பி.யில் இருந்து 1000 பஸ்.. பிரியங்கா காந்தி ஏற்பாடு..

Priyanka Gandhi arrange 1,000 buses to send migrants home in UP.

by எஸ். எம். கணபதி, May 17, 2020, 10:14 AM IST

உத்தரப்பிரதேசத்தில் இருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு 1000 பஸ்களை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடவசதி எதுவும் இல்லாமல் தவித்தனர். பல நாட்களாகியும் பஸ், ரயில் போக்குவரத்து வசதியும் இல்லாததால், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மேல் நடந்தே செல்கின்றனர். சரக்கு லாரிகளிலும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்கின்றனர். இதில் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பிறமாநில தொழிலாளர்களுக்குச் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அந்த ரயில் கட்டணத் தொகையைக் காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்றார். உடனே ரயில்வே அமைச்சகம், மத்திய அரசு 85 சதவீதமும், மாநில அரசு 15 சதவீதமுமாக டிக்கெட் கட்டணத்தை ஏற்கும் என்று அறிவித்தது. ஆனாலும், அரியானா உள்படப் பல மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிறமாநிலத் தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தினர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது செலவில் 500 பஸ்களை ஏற்பாடு செய்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உ.பி. உள்ளிட்ட பிற மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்தார். இந்த தொழிலாளர்கள் இன்று(மே17) ஊர் திரும்பியுள்ளனர். மேலும், உத்தரப்பிரதேசத்தில் தவிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அழைத்துச் செல்ல 1000 பஸ்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காசியாபாத்திலிருந்து 500 பஸ்களையும், நொய்டாவிலிருந்து 500 பஸ்களையும் தாம் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு அனுமதி தர வேண்டுமென்றும் கோரியுள்ளார். கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளி பின்பற்றி, தொழிலாளர்களை அழைத்துச் செல்வதாகவும் அவர் உறுதி அளித்திருக்கிறார். உ.பி. அரசு அனுமதியளித்தால் இந்த 1000 பஸ்கள் உடனடியாக அனுப்பப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

You'r reading பிறமாநில தொழிலாளர்களுக்கு உ.பி.யில் இருந்து 1000 பஸ்.. பிரியங்கா காந்தி ஏற்பாடு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை