இந்தியாவிலேயே கொரோனா பாதிக்காத பகுதி எது தெரியுமா?

Why Lakshadweep Remains COVID

by Nishanth, Sep 13, 2020, 16:40 PM IST

இந்தியாவில் கொரோனா பாதிக்காத ஒரு பகுதி இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். அதுவும் தென்னிந்தியாவில் தான் இருக்கிறது. கேரளாவுக்கு அருகிலுள்ள லட்சத்தீவு தான் இதுவரை இந்தியாவில் கொரோனா தலைகாட்டாத ஒரேயொரு பகுதியாகும்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது, சராசரியாக தினமும் 1100 பேருக்கு மேல் மரணமடைகின்றனர். இன்றைய கணக்கின்படி இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 47.50 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை மொத்த மரணம் 79 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதே வேகத்தில் சென்றால் விரைவில் உலகில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பெற்றுவிடும் நிலை உள்ளது.


இந்நிலையில் இந்தியாவிலேயே கொரோனா எட்டிப்பார்க்காத ஒரேயொரு பகுதியாக லட்சத்தீவு உள்ளது. இது தான் இந்தியாவிலேயே மிகவும் சிறிய யூனியன் பிரதேசம் ஆகும். 32 ச.கி. பரப்பளவு மட்டுமே உள்ள லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை 2010ம் ஆண்டின் கணக்கின்படி 64,473 ஆகும். இங்கு இதுவரை ஏன் கொரோனா பரவவில்லை என்பதை லட்சத்தீவின் சுகாதாரத் துறை செயலாளார் சுந்தரவடிவேல் கூறுவதை கேட்போம். நாங்கள் சுகாதாரத் துறையில் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
இந்த நோய் பரவத் தொடங்கினால் எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரியும். அதனால் தான் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்பே நாங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கினோம். கொரோனா பரவத் தொடங்கிய கட்டமான பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே லட்சத்தீவுக்கு வருபவர்களுக்கு நாங்கள் கட்டுப்பாடு விதிக்க தொடங்கி விட்டோம். கொச்சியிலிருந்து தான் லட்சத்தீவுக்கு விமான சர்வீசும், கப்பல் சர்வீசும் உள்ளன.


பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து கொச்சி விமானநிலையத்தில் வைத்தே பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல கப்பல் பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. லட்சத்தீவுக்கு வர விரும்புபவர்கள் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதற்காக கொச்சியில் நாங்கள் 2 ஓட்டல்களை வாடகைக்கு எடுத்தோம். 7 நாட்கள் தனிமையில் இருந்த பின்னர் பரிசோதனை நடத்திய பிறகு தான் லட்சத்தீவுக்கு வரமுடியும். இங்கு வந்த பின்னர் எங்கள் அரசின் கண்காணிப்பில் மேலும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமை முகாமில் இருக்க வேண்டும். இதுவரை லட்சத்தீவில் 67 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி உள்ளோம். ஆனால் யாருக்கும் பாசிட்டிவ் ஆகவில்லை. இது போன்ற கடும் நடவடிக்கைகளால் தான் இதுவரை எங்களது பகுதிக்கு கொரோனா வரவில்லை என்று அவர் கூறினார்.


லட்சத் தீவு என்பது பெயரில் தானே தவிர இங்கு லட்சம் தீவுகள் எல்லாம் இல்லை. வெறும் 36 தீவுகள் மட்டுமே உள்ளன. அதிலும் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இந்த தீவுகள் 220 முதல் 440 கி.மீ. தொலைவில் உள்ளன. மருத்துவம் உட்பட அனைத்து முக்கிய தேவைகளுக்கும் இங்கு உள்ளவர்கள் கொச்சிக்குத் தான் செல்கின்றனர். கொச்சியிலிருந்து விமான சர்வீஸ் தவிர 7 பயணிகள் கப்பல்களும் இயக்கப்பட்டு வருகின்றன. லட்சத்தீவில் 3 மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. இதில் ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 30 படுக்கைகளுடன் ஒரு கட்டிடம் தயார்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஒரு பகுதியிலாவது கொரோனா அச்சம் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

You'r reading இந்தியாவிலேயே கொரோனா பாதிக்காத பகுதி எது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை