30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை - நீர்வளத்துறை செயலாளர்

by Suresh, Mar 22, 2018, 09:13 AM IST

இம்மாதம் (மார்ச்) 30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை வருகிற 30-ஆம் தேதிக்குள் அமைக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து ஏற்கெனவே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எழுத்துப் பூர்வமான கருத்தைத் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றுதான் கூறியுள்ளது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது.

சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சரியான தீர்வாக அமையும் திட்டத்தை உருவாக்க முடியும், இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.” என்று கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு -thesubeditor.com

You'r reading 30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை - நீர்வளத்துறை செயலாளர் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை