கேரளாவில் 7 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் கடற்கரைகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உட்படப் பொழுதுபோக்கு மையங்கள் திறக்கப்படுகின்றன. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி அளிக்கப்படும்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடற்கரைக்குச் செல்லக் கூட யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடு முழுவதும் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் சுற்றுலாத்துறை மூலம் தான் பெருமளவு வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த 10ம் தேதி முதல் சுற்றுலா மையங்களை படிப்படியாக திறக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி முதல்கட்டமாக படகு இல்லங்கள், சுற்றுலா படகு போக்குவரத்து, சாகச சுற்றுலா மையங்கள் மற்றும் மலை வாசஸ்தலங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டன. இங்கு கொரோனா நிபந்தனைகளின் படி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை முதல் கேரளா முழுவதும் கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் மிருகக்காட்சி சாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கும் முகக் கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைப்பிடிப்பது உட்பட கொரோனா நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்கள் 7 நாட்கள் வரை தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 7 நாட்களுக்கு மேல் தங்க வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மேலும் கேரளா வருபவர்கள் கோவிட்-19 கேரளா ஜாக்ரதா என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.