சித்தராமையா அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது என்று அமித் ஷா பேசியதை, நரேந்திர மோடி அரசு என்று பாஜக எம்.பி. மொழிபெயர்ப்பு செய்தது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தாவங்கர் பகுதியில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அமித் ஷா இந்தியில் பேசியதை, பாஜக எம்.பி. பிரஹலாத் ஜோதி கன்னடத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது, “ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் சித்தராமையா ஒன்றும் செய்யமாட்டார் என அமித்ஷா பேசினார்.
ஆனால், மொழிபெயர்ப்பு செய்த எம்.பி. பிரஹலாத் ஜோஷி, “நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது” என கன்னடத்தில் மொழி பெயர்ப்பு செய்தார். இதனால், அங்கு குழப்பம் ஏற்பட்டது.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமித்ஷா, "ஊழல் மலிந்த அரசுக்கு போட்டி வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசுக்குத் தான் முதல் இடம் கிடைக்கும்" என்று கூறினார். அதாவது சித்தராமையா என்று கூறுவதற்கு பதிலாக, பாஜக முன்னாள் முதல்வரான எடியூரப்பா பெயரை குறிப்பிட்டார்.
அப்போது அருகில் மற்றொருவர், அமித் ஷாவிடம் எடுத்துரைக்க மறுபடி சித்தராமையா அரசு என குறிப்பிட்டார். அப்போது எடியூரப்பாவும் அருகில் இருந்தார். அமித்ஷாவின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.