கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து அகமதாபாத் நகரில் இன்று இரவு 9 மணி முதல் 57 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வந்த போதிலும் கடந்த இரு தினங்களாக நோயாளிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.
மொத்த நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் 90 லட்சத்தைத் தாண்டி விட்டது. உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் 90 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 46,260 ஆகும். கடந்த 8 நாட்களில் நேற்று தான் கூடுதல் பேருக்கு நோய் பரவியுள்ளது. 589 பேர் நேற்று மரணமடைந்துள்ளனர். இதுவும் கடந்த 14 நாட்களில் அதிக எண்ணிக்கையாகும். தற்போது இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு நோய் பரவ 22 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் நோய் பரவல் அதிகமாக இருந்த போது 11 நாட்களிலேயே 10 லட்சம் பேருக்கு நோய் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த சில தினங்களாக நோய் பரவல் அதிகரித்து வருகிறது. முந்தைய மாதங்களில் சராசரியாக 140 பேருக்கு மட்டுமே நோய் பரவியது. ஆனால் இந்த மாதம் தினமும் 200 பேருக்கு மேல் நோய் பரவுகிறது. நேற்று மட்டும் 230 பேருக்கு நோய் பரவியது. இதையடுத்து நிபந்தனைகளைக் கடுமையாக்க அகமதாபாத் மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இதையடுத்து இன்று இரவு 9 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை 57 மணி நேரத்திற்கு ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிக்கத் தீர்மானித்துள்ளதாகக் குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் குப்தா அறிவித்துள்ளார்.
இதன் பின்னர் திங்கள் இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேரங்களில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும். தினமும் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல முடியும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் குப்தா தெரிவித்துள்ளார். சந்தைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவே நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.