கொரோனா நிலைமை நாட்டில் நாளுக்கு நாள் படுமோசமாகிறது.. உச்சநீதிமன்றம் வேதனை

by Nishanth, Nov 27, 2020, 16:44 PM IST

நம் நாட்டில் கொரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து மாநில அரசுகள் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக சராசரியாக தினமும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவி வருகிறது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,082 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதையடுத்து இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டிவிட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 492 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,715 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் தொடக்க கட்டத்தில் நோய் பரவலின் வேகம் குறைவாக இருந்த கேரளாவில் கூட தற்போது தினசரி நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே நோய் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தற்போது கேரளா இடம் பிடித்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 5,500 மேற்பட்டோருக்கு நோய் பரவுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நம் நாட்டில் கொரோனா பரவும் வேகம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் நிலைமை படுமோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே கடும் நடவடிக்கைகள் கண்டிப்பாக தேவையாகும். மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசியல் வேறுபாடு மறந்து மாநில அரசுகள் செயல்படவேண்டும்.

மத்திய அரசு வெளியிடும் உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் அலட்சியமாக இருக்கக்கூடாது. விழாக்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர்களில் 80 சதவீதம் பேரும் முகக் கவசம் அணிவதில்லை. சிலர் முகக் கவசத்தை நாடியில் அணிகின்றனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை நோய்த் தடுப்பு முறைகளில் கவனக்குறைவு கூடாது. தற்போது கொரோனா பாதிக்கப்படுபவர்களில் 70 சதவீதம் பேரும் கேரளா உள்பட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளில் 14.7 சதவீதம் பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். மகராஷ்டிரா மாநிலத்தில் தான் மிக அதிகமாக 18.9 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் பரவலை தடுப்பதில் டெல்லி அரசு நன்றாக செயல்பட வில்லை. எனவே உடனடியாக அனைத்து மாநிலங்களும் நோய்த்தடுப்பு நோய்களை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You'r reading கொரோனா நிலைமை நாட்டில் நாளுக்கு நாள் படுமோசமாகிறது.. உச்சநீதிமன்றம் வேதனை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை