பெண்களின் மேலாடையை நீக்காமல் தொடுவது பலாத்கார குற்றமாகாது என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை உத்தரவுகளை பிறப்பித்த நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை பெண் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை கூடுதல் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா கனேடிவாலா. இவர் பலாத்கார குற்றம் தொடர்பாக சமீபத்தில் பல சர்ச்சையான உத்தரவுகளை பிறப்பித்தார். நாக்பூரை சேர்ந்த ஒரு 12 வயது சிறுமியை 39 வயதான ஒருவர் பாலியல் வன்முறை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அந்த நபருக்கு போக்சோ பிரிவில் 3 வருட சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் நாக்பூர் உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்தார். அந்த சிறுமியின் மேலாடையை, தான் கழட்டவில்லை என்றும், எனவே தன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா, மேலாடையை கழட்டாமல் தொடுவது பலாத்கார குற்றம் ஆகாது என்றும், உடலும் உடலும் தொட்டால் தான் பலாத்காரமாக கருதப்படும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவை பின்னர் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதே போல மேலும் சில சர்ச்சையான உத்தரவுகளையும் நீதிபதி புஷ்பா பிறப்பித்தார். வேறு ஒரு போக்சோ வழக்கில் 5 வயது சிறுமியை கையை பிடிப்பதோ, பேண்ட் ஜிப்பை திறப்பதோ பலாத்கார குற்றம் ஆகாது என்றும் உத்தரவிட்டார். அடுத்தடுத்த இதுபோன்று சர்ச்சையான உத்தரவுகளை பிறப்பித்ததை தொடர்ந்து நீதிபதி புஷ்பாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்கும் முடிவை உச்சநீதிமன்ற கொலீஜியம் ரத்து செய்துள்ளது. மேலும் இவர் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.