முந்தைய நாள் இரவு வரை அலுவலகத்தில் பணி மறுநாள் அதிகாலை மேயருக்கு சுகப்பிரசவம்

by Nishanth, Feb 13, 2021, 09:37 AM IST

முந்தைய நாள் இரவு 9.30 மணி வரை அலுவலகத்தில் பணியில் மும்முரமாக இருந்த ஜெய்ப்பூர் நகர மேயருக்கு மறுநாள் அதிகாலை 5.14 மணியளவில் மருத்துவமனையில் சுகப்பிரசவம் நடந்தது. மேயர் சவும்யா குஜ்ஜருக்கு சமூக இணையதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.ராஜஸ்தான் மாநிலம் கிரேட்டர் ஜெய்ப்பூர் மாநகராட்சி பாஜகவின் வசம் உள்ளது. இந்த மாநகராட்சியின் மேயராக இருப்பவர் டாக்டர் சவும்யா குஜ்ஜர். இவருக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சவும்யா மீண்டும் கர்ப்பிணி ஆனார். ஆனாலும் இவருக்கு வேலை தான் எல்லாம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதிலும் தினமும் அலுவலகத்திற்கு வருவதை இவர் நிறுத்தவில்லை. இரவு எவ்வளவு தாமதமானாலும் பணிகளை முடித்த பின்னரே வீட்டுக்குச் செல்வார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கம் போல மேயர் சவும்யா அலுவலகத்திற்கு வந்திருந்தார். அன்று இரவு திடீரென ஒரு அவசரக் கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கூட்டம் முடிவதற்கு மிகவும் தாமதமானது. இரவு 9.30 மணி வரை கூட்டம் நீண்டது. இடையிடையே சிறிது உடல்நல பிரச்சனையும், வலியும் இருந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மேயர் சவும்யா கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தை முடித்த பின்னரே அவர் வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்கு சென்ற உடனேயே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 5:14 மணியளவில் அவருக்குச் சுகப்பிரசவம் நடந்தது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை மேயர் சவம்யா குஜ்ஜர் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்தார். தானும், குழந்தையும் நலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரசவ வேதனை வரும் வரை அலுவலகப் பணி செய்து வந்த மேயருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றால் 3 நாட்களுக்குள் வீட்டுக்குத் திரும்பி அலுவலகப் பணிகளையும் தொடங்கி விடுவேன் என்றும், ஒரு வாரத்தில் அலுவலகத்திற்குச் செல்லவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading முந்தைய நாள் இரவு வரை அலுவலகத்தில் பணி மறுநாள் அதிகாலை மேயருக்கு சுகப்பிரசவம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை