இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது உச்சத்தை எட்டியுள்ளது. என்ன செய்வதென்றே தெரியாமல் மத்திய அரசுதிணறி வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது இந்தியா. ஆக்ஸிஜன் தட்டுபாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொற்று எண்ணிக்கை 1 லட்சம் என்றிருந்து, பின்னர் 1.5 லட்சம், 2 லட்சம் என அதிகரித்து நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையை கடந்த ஒரு மாதத்திற்குள் நாடு சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் மக்களின் அவசரகால தேவைக்கான மருத்துவ சிகிச்சைக்கு இலவச ஆட்டோ சேவையை வழங்கி வருகிறார். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய இந்த சேவை குறித்து ரவி கூறுகையில், ``இந்த சேவையை கடந்த 15ந்தேதியில் இருந்து வருகிறேன். ரிம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை பெண் ஒருவருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் அச்சத்தினால் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும் அவரை அழைத்து செல்ல முன்வரவில்லை.எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன் என அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அதில் பலனில்லை. இந்நிலையில், அவரை கொண்டு சென்று மருத்துவமனை அருகில் இறக்கி விட்டேன். அவர் யார், கொரோனா நோய் உடையவரா, இல்லையா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவரிடம் பணம் வாங்க மறுத்து விட்டேன். நான் திரும்பி வரும் வழியில், இந்த பெண்ணை போன்று எத்தனை பேர் கொரோனா அச்சத்தினால் போக்குவரத்து சேவை கிடைக்காமல் அவதிப்படுவார்கள் என உணர்ந்தேன்” என உணர்வுப்பூர்வமாக கூறுகிறார்.
இதனை தொடர்ந்து சமூக ஊடகத்தில் இவரது தொலைபேசி எண்ணை பதிவிட்டு, அவசரகால தேவை உள்ள மக்களுக்கு இலவச சவாரிக்கான விவரங்களை தெரிவித்து உள்ளார். இதன்பின்னர் பலர் இவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகளுக்கு செல்லவே பிற ஆட்டோ ஓட்டுனர்கள் தயங்கி வரும் சூழலில் ரவி அகர்வால் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவர்களை உடனடியாக அழைத்து செல்கிறார். உண்மையில் அவரது சேவை பாராட்டத்தக்கது.