புது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்ற தீர்ப்பு வெளியானதில் இருந்து புதுச்சேரியின் அரசியல் சூழல் கலவரமாகி வருகிறது.
டெல்லியில் தலைமை நிர்வாகமாக முதல்வரே செயல்படுவார் என்றும் அந்தப் பொறுப்பு ஆளுநருக்கு இல்லை என்றும் நேற்று காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், நேற்று மதியமே, இந்தத் தீர்ப்பு புதுச்சேரி அரசுக்குப் பொருந்தாது என ஒரு டிஸ்க்லைமர் போட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
மாநில அரசா..? ஆளுநர் அதிகாரமா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இவ்விகாரம் குறித்துப் பேசுகையில், “துணை நிலை ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உண்டு. நாங்கள் அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவதுதான் துணை நிலை ஆளுநரின் வேலை” தீர்க்கமாகக் கூறினார்.
நாராயணசாமியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கிரண் பேடி. மேலும், ‘மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் புது டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் உள்ள வித்தியாசம் குறித்து தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது’ என்று ட்வீட் பதிவுடன் கருத்து தெரிவித்துள்ளார்.