கனமழை எதிரொலியால், கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.
கேரள மாநிலத்திற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு கடும் சேதமடைந்துள்ளது. மத்திய அரசு ரூ.100 கோடி நிதி வழங்கிய நிலையில், பிற மாநிலங்களும் கேரள மாநிலத்திற்கு உதவி வருகின்றன.
இதைதவிர, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகள் நிதி வழங்கி வருகின்றன. அந்த வகையில், கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாலத்தீவு அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், எங்கள் நெருங்கிய அண்டை நாடாகும் இந்தியாவில் இயற்கை பேரழிவு ஏற்பட்டால் அது மாலத்தீவில் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தேவையான நேரங்களில் தோழமையோடு எங்களுடன் நின்ற இந்தியாவிற்கு மாலத்தீவின் சிறிய நன்கொடை வழங்கப்படுகிறது என்று மாலத்தீவு தூதர் அகமது முகமது கூறினார்.