கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.
கேரள மாநிலத்திற்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு கடும் சேதமடைந்துள்ளது. மத்திய அரசு ரூ.100 கோடி நிதி வழங்கிய நிலையில், பிற மாநிலங்களும் கேரள மாநிலத்திற்கு உதவி வருகின்றன.
இதைதவிர, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகள் நிதி வழங்கி வருகின்றன.
இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கேரள வெள்ள சேதம் குறித்து டெல்லியில் நேற்று நடத்திய ஆலோசனையின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மாத சம்பளம் ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், உச்ச நீதிமன்ற நீதபதிகள், ஆசிரியர்கள் ஒரு மாத சம்பளம் நிவாரண நிதியாக அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.