ஏற்றிச் செல்ல வந்த 'உபேர்' ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் பயணியே வாகனத்தை ஓட்டியுள்ளார். டுவிட்டரில் பயணி இச்சம்பவத்தை தெரிவித்ததையடுத்து அந்த ஓட்டுநரை உபேர் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
கடந்த 9ம் தேதி இரவு பெங்களூரு கெம்பேகெளடா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து செல்வதற்கு உபேர் செயலி மூலம் பதிவு செய்துள்ளார் சூரியா ஒருகண்டி என்ற வாடிக்கையாளர். அவரது அழைப்பின் பெயரில் உபேர் வாகனம் ஒன்று வந்துள்ளது.
ஓட்டுநர் மிதமிஞ்சிய போதையில் இருந்தார். உபேர் செயலியில் இருந்த புகைப்படத்திற்கு மாறாக வேறொருவர் வந்திருந்ததாகவும் தெரிகிறது. வாகனத்தை ஓட்ட இயலாத நிலையில் இருந்த ஓட்டுநரை நகர்த்தி விட்டு, பயணியான சூரியா ஒருகண்டி தாமே காரை ஓட்டியுள்ளார். ஓட்டுநரை வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவரது புகாருக்கு 20 மணி நேரம் கழித்து பதிலளித்த உபேர் நிறுவனம், இது குறித்து தாங்கள் விசாரிப்பதாகவும், பயணியான சூரியா வாகனத்தை இயக்கியது பாதுகாப்பானதல்ல என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் புகாருக்கு உள்ளான ஓட்டுநரை தங்கள் சேவையிலிருந்து விலக்கி விட்டதாக தற்போது உபேர் அறிவித்துள்ளது.