புதுச்சேரி அரசு நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலையிடுவது கேலிக்கூத்தானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வாதம் செய்தார்.
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி யூனியன் பிரதேச ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ-வான லட்சுமி நாராயணன் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவது, உத்தரவுகள் பிறப்பிப்பது என, வரம்பு மீறிய செயல்பாடுகளில் துணை நிலை ஆளுநர் ஈடுபடுவது மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என, மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனுவுக்கு துணை நிலை ஆளுநரின் சார்பில் அவரது தனிச்செயலாளர் ஸ்ரீதரன் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “துணை நிலை ஆளுநருக்கு என பிரத்யேக அதிகாரங்கள் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரியே துணை நிலை ஆளுநர்தான்.
மேலும், நிர்வாக ரீதியாக துணை நிலை ஆளுநர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் குற்றம் காண முடியாது என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.
"அரிதிலும் அரிதான அரசின் நடவடிக்கைகளில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும். மாறாக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது கேலிக்கூத்தானது. மேலும், ஒவ்வொரு விஷயத்துக்கும், அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்களைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல"
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களை மீறி, துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியாது. அதற்கு அவருக்கு அதிகாரமும் இல்லை" என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாதம் செய்தார்.