சீரடி சாய்பாபா கோவிலில் கடந்த 17ம் தேதி முதல் மூன்று நாட்களில் ரூ.5.9 கோடி நன்கொடை வசூலாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிவலில், சாய்பாபா ஜீவசமாதி அடைந்த 100வது ஆண்டை முன்னிட்டு கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த மூன்று நாட்களில் உள்ளூரில் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சீரடி சாய்பாபாவை தரிசித்து சென்றனர். இதனால், இந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.5.9 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சாய்பாபா சந்த்ஸ்தான் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ரூபல் அகர்வால் கூறுகையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் சாய்பாபா கோவிலில் வைக்கப்பட்டிருந்த நன்கொடை பெட்டிகளில் ரூ.2.52 கோடியை பக்தர்கள் நன்கொடையாக செலுத்தி உள்ளனர். இதை தவிர அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சீரடி நகரில் ரூ.1.46 கோடி வசூலாகி உள்ளது. மேலும், ஆன்லைன், டெபிப் கார்டு மூலம் ரூ.1.41 கோடி நன்கொடை செய்துள்ளனர்.
ரூ.28.24 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.24.55 லட்சம் வெளிநாட்டு கரன்சியும் நன்கொடையாக செலுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் நன்கொடை தவிர, தரிசன டிக்கெட், ஆன்லைன் அனுமதி மூலம் ரூ.78 லட்சமும், லட்டு பிரசாதம் மூலம் ரூ.28.51 லட்சமும் அறக்கட்டளைக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.