டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இல்லாமலும் இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சில அரிதான நிகழ்வாக இப்படி அமையக்கூடும் என்று டெல்லியிலுள்ள மருத்துவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
50 வயதான பெண்மணி ஒருவர் அதிக அசதி காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். பரிசோதனையில் அப்பெண்மணிக்கு இரத்தத்தில் கட்டுப்படுத்தப்படாத அதிக சர்க்கரையும், அதிக அமில சத்தும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இரத்தத்தில் சிவப்பு, வெள்ளை மற்றும் தட்டை அணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டதால், அவருக்கு டெங்கு பாதிப்புக்கான சோதனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
என்எஸ்1 என்ற ஆண்டிஜன் சோதனை மூலம் டெங்கு பாதிப்பு தெரிய வந்துள்ளது. ஆர்டிபிசிஆர் என்ற சோதனை மூலம் டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆகவே, காய்ச்சல் அறிகுறி இல்லாமலும் டெங்கு கிருமி பாதிக்கக்கூடும் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர்.
முதுமை, நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தோருக்கு டெங்கு பாதித்தால், அறிகுறியான காய்ச்சல் வராமல் போகக்கூடும்.
அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவான பலவீனம், இரத்த அழுத்தம் குறைவுபடுதல், இரத்த தட்டை அணுக்கள் எண்ணிக்கை குறைவு ஆகிய அறிகுறிகளை கொண்டு டெங்கு பாதிப்புக்கான சோதனை செய்யப்படுகிறது.
“டெங்கு பாதிப்புள்ள காலங்களில் இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டை அணுக்கள் எண்ணிக்கை குறைவாக காணப்படுமானால், காய்ச்சல் இல்லாதபோதும்கூட கண்டிப்பாக டெங்கு பாதிப்புக்கான பரிசோதனை செய்யப்பட வேண்டும்," என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
2013ம் ஆண்டு 5,574 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 6 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். 2014ம் ஆண்டு 995 பேர் பாதிப்புக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2015ம் ஆண்டு அதிகபட்சமாக 15,897 பேர் டெங்கு கிருமி பாதிப்புக்குள்ளாகியதில் 60 பேர் மரித்துள்ளனர்.
2016ம் ஆண்டு 4,431 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியதில் 10 பேர் இறந்துள்ளனர். 2017ம் ஆண்டு 4,726 நோயாளிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு அக்டோபர் 20 வரையுள்ள கால கட்டத்தில் 1,020 டெங்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் செப்டம்பர் 18ம் தேதி 13 வயது சிறுமி டெல்லியில் இறந்துள்ளதாக அங்குள்ள அறிக்கை கூறுகிறது.
டெங்கு தவிர மற்ற கொசு பாதிப்பு நோய்களான மலேரியா 411 பேருக்கும், சிக்கன்குனியா 109 பேருக்கும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.