Kerala hartal | சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பந்த் - இயல்பு நிலை பாதிப்பு!

Kerala hartal today on Sabarimala Issue

Jan 3, 2019, 09:03 AM IST

சபரிமலையில் பெண்கள் இருவர் ஐயப்பனை தரிசனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் இன்று பந்த் நடைபெறுகிறது. இதனால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடைகளும் அடைக்கப் பட்டுள்ளன. பத்தனம்திட்டா மாவட்டத்தில் கண்டன பேரணி நடத்தியவர்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்கியதில் இந்துத்வ அமைப்பைச் சேர்ந்த தொண்டர் பலியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்பினர் சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டங்களை நடத்தினர்.

ஆனால் தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள மாநில ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு முனைப்பு காட்டியது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையில் கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களும் போலீசாரின் உதவியுடன் ஐயப்பனை தரிசித்தனர்.

இத் தகவல் வெளியான நிமிடம் முதல் கேரளாவில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல பகுதிகளில் தீ வைப்பு, கல்வீச்சு, சாலை மறியல் என வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து இன்று கேரளாவில் பந்த் நடத்த சபரிமலை கர்மா சமிதி என்ற இந்துத்வா ஆதரவு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.





முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப் படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.





இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தில் கண்டன பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் சந்திரன் உன்னிதன் என்ற இந்து அமைப்பு தொண்டர் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

You'r reading Kerala hartal | சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பந்த் - இயல்பு நிலை பாதிப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை