ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே முழுமையாக உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவருக்குத் தொடர்ந்து கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது. கடந்த , 28-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனால் அவர்கள் அனைவரும் துபாயில் சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அங்கு ஒரு வாரமாக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 31ம் தேதி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 13 பேருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதேபோல் 3ம் தேதி கொரோனா சோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் பயிற்சியைத் தொடங்கினர்.
இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், மீண்டும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால், அவர் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார். எனினும் , அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சென்னை அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் முக்கியமான இளம் வீரர்களில் ஒருவர். வலது கை பேட்ஸ்மெனான இவரே இந்த முறை ரெய்னா இடத்தில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.