ஐபிஎல் போட்டிகளில் விளையாட துபாய் செல்லும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு 6 நாட்களுக்கு பதிலாக 36 மணி நேரம் தனிமையில் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் நாளை சென்னை சூப்பர் கிங்சும் , மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன. ஐபிஎல் விளையாட துபாய் செல்லும் வீரர்கள் அனைவரும் 6 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஏற்கனவே சென்ற வீரர்கள் அனைவரும் 6 நாள் தனிமையில் இருந்த பின்னர் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டனர். கடந்த வாரம் கிரிக்கெட் மைதானங்களை பார்வையிட சென்ற இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் 6 நாள் தனிமையில் இருந்த பின்னரே வெளியே இறங்க முடிந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு இதில் புதிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் 36 மணி நேரம் தனிமையில் இருந்தால் போதும். அதற்கு முன்பாக வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து புறப்படும் போதும், துபாய்க்கு சென்ற பின்னரும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இந்த புதிய சலுகையால் சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளை சேர்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முதல் போட்டியிலேயே விளையாட வாய்ப்பு கிடைக்கும்.