ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்றை (21-10-2020) லீக் சுற்றில் அபுதாபியில் மோதின. கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியானாதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி.
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த கொல்கத்தா அணிக்குத் தொடக்கம் முதலே, பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள். முதல் ஓவரை வீசிய கிரிஸ் மோரிஸ் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இன்னிங்சை தொடங்கி வைத்தார்.
இரண்டாவது ஓவரை வீச வந்த சிராஜ் தனது இலாவகமான பந்து வீச்சால் எதிரணியை மிரட்டினார். தனது முதல் ஓவரிலேயே கொல்கத்தா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான திரிபாதி (1), ராணா(0) விக்கெட்டுகளை ரன் ஏதும் கொடுக்காமல் வீழ்த்தினர்.
3/2 என்று திணறிய கொல்கத்தா அணியை, இடம் கொடுக்காமல் அடுத்த தாக்குதலை நவ்தீப் சைனி மூலம் தொடர்ந்தார் கேப்டன் கோலி. இன்னிங்சின் மூன்றாவது ஓவரை வீசிய சைனி கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார்.
மூன்று ஓவர் முடிவில் 13 ரன் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த அணியைப் பேண்டான் மீட்பாரா? என்ற கேள்விக்கு நாங்கள் அதற்குத் தயாராக இல்லை என்பது போல் மீண்டும் பந்து வீசத் தயாரானார் சிராஜ்.
இரண்டாவது ஓவரை வீசிய சிராஜ் இந்த முறை பேண்டனை தட்டி தூக்கி, ஓவரையும் மைடன் செய்து அசத்தினார். கேப்டனின் நம்பிக்கையை நிறைவேற்றிய திருப்தி சிராஜிடம் இருந்தது.நான்காவது ஓவருக்கு இணைந்த இரண்டு கேப்டன்களும் (தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன்) நிதானமாக ஆடத்தொடங்கினர். 31 பந்துகளைச் சந்தித்த இந்த இணை 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சென்னையின் அணியின் மிக மோசமான ஆட்டத்தைத் தன்வசப்படுத்திக் கொண்டது கொல்கத்தா அணி.
முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் அவுட்டாகி வெளியேற, மோர்கனின் நிலைமை படு மோசமானது. ஏண்டா கேபடன்ஷிப்பை எடுத்தோம் என்ற அளவுக்கு அவர் நிர்மூலமாக்கப்பட்டார்.கேப்டன் என்ற முறையில் மோர்கன் மட்டுமே பொறுப்புடன் விளையாடி 30 ரன்களை சேர்த்தார். ஒருவழியாக இருபது ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 84 ரன்களை சேர்த்தது.
பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் நிலைகுலைந்த கொல்கத்தாவுக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசை அளித்தனர். 2017 ல் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியைத் துவைத்து எடுத்ததற்கு 2020 ல் பழி தீர்த்துக் கொண்டது பெங்களூர் அணி.பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதே அணியின் வெற்றிக்குக் காரணம். இந்து சீசனில் பஞ்சாப் அணிக்கு அடுத்து மிக மோசமாகப் பந்து வீசிய பெங்களூர் இந்த போட்டியின் மூலம் அந்த விமர்சனங்களைச் சரி செய்து கொண்டது.
இருபது ஓவர் முடிவில் 85 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க இணையான படிக்கல் 25 மற்றும் பின்ச் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.பெங்களூர் கேப்டன் கோலி மற்றும் குர்க்ரீத் சிங் மேன் இருவரும் இணைந்து அணியின் வெற்றியை உறுதியாக்கினர்.
இந்த போட்டியில் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பாக 4 மைடன் ஓவர்கள் வீசப்பட்டுது குறிப்பிடத்தக்கது. இது இந்த சீசனில் முதல் தடவையாகும்.இந்த வெற்றியின் மூலம் 7 வெற்றிகளைப் பதிவு செய்ததுள்ளது பெங்களூர் அணி.
பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் (4-2-8-3) இரண்டு மைடன், மூன்று விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.