ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்ட கொல்கத்தா!

by Loganathan, Nov 2, 2020, 09:26 AM IST

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. இதற்கு முன்னர் துபாய் அரங்கில் ராஜஸ்தான் ஆடிய நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை பவுலரான ஆர்ச்சர் முதல் ஓவரின், இரண்டாவது பந்தில் ராணாவை டக் அவுட்டில் தூக்க அரண்டுபோனது கொல்கத்தா. பின்னர் கில் உடன் கைகோர்த்த திரிபாதி பொறுப்பாக விளையாட அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.

ராஜஸ்தான் அணியில் ஆல்ரவுண்டரில் கலக்கி வரும் ராகுல் திவேதியா கில் (36), சுனில் நரைன் (0), மற்றும் தினேஷ் கார்த்திக் (0) விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் இக்கட்டான நிலையில் ராஜஸ்தான் அணிக்காக 31 ரன்களை விளாசி நேற்றைய போட்டியில் ஜொலித்தார்.கொல்கத்தா அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தாலும், ஒருபுறம் நிலையாக நின்று அதிரடியாக அசத்திக் கொண்டிருந்த கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் 35 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரஸுல் நேற்றைய போட்டியில் 11 பந்தில் 3 சிக்சர்களை விளாசி அதிரடியாக 25 ரன்களை சேர்த்தார்.பரிதாப நிலையில் இருந்த கொல்கத்தா இருபது ஓவர் முடிவில் மோர்கன் அதிரடியால் 191/7 ரன்களை சேர்த்தது.

இருபது ஓவரில் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. ஓவருக்கு 9.6 ரன்ரேட் தேவைப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வேண்டிய சூழலில் கடந்த இரண்டு போட்டிகளில் அசத்திய பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

பின்னர் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மென்கள் யாரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் ராஜஸ்தான் அணி பவர்பிளே ஓவர் முடிவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

பட்லர் மற்றும் திவேதியா இணை சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தினர். ஆனால் அவர்களும் 35 மற்றும் 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணியால் இருபது ஓவர் முடிவில் 131 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ்(4-0-34-4) நேற்றைய போட்டியில் சிறப்பாகப் பந்து வீசி ராஜஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தார். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

You'r reading ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்ட கொல்கத்தா! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை