இந்த ஆண்டின் ஐபிஎல் திருவிழா கடைசி கட்டத்தை எடுத்துள்ளது. லீக் சுற்றுகள் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியைத் தோற்கடித்து நேரடியாகத் தகுதி சுற்றுக்குள் நுழைந்தது டெல்லி அணி.டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் இரண்டுமே ஒரு புள்ளியில் இருந்த நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த டெல்லி அணிக்கு, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு வெற்றி தேவைப்பட்டது.
வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பெங்களூர் அணி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தேவ்தத் படிக்கல் இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடினார். ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபிலிப் அவுட்டாக, படிக்கல் உடன் கைகோர்த்தார் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி.
கோலி மற்றும் படிக்கல் இருவரும் இணைந்து 57 ரன்களை விளாசி நம்பிக்கை அளித்தனர். ஆனால் நல்ல தொடக்கம் கிடைத்தும் கோலி(29) இந்த போட்டியிலும் வழக்கம்போல் அவுட்டாகி வெளியேறினார்.மறுபுறம் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த படிக்கல் 41 பந்தில் 5 பவுண்டரிகளை விளாசி 50 ரன்களை கடந்து அவுட்டாகி வெளியேறினார். பின்னர் இணைந்த டிவில்லியர்ஸ் மற்றும் துபே இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர்.
பெங்களூர் அணியின் கேப்டன் கோலியின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தமுறையும் பெங்களூர் அணியால் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. இருபது ஓவர் முடிவில் பெங்களூர் அணியால் 152/7 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.டெல்லி அணி சார்பில் பந்து வீசிய நோர்ட்ஜா மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
டெல்லி அணிக்கு இருபது ஓவரில் 153 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஒவருக்கு 7.25 ரன்ரேட் தேவைப்பட்ட நிலையில் 9 ரன் எடுத்திருந்த ப்ரித்வி ஷா இரண்டாவது ஓவரை வீசிய முகமது சிராஜ் ஓவரில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.வெற்றிக்கான வாய்ப்புகளைப் பெங்களூர் ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கான துளி சந்தர்ப்பத்தைக் கூட தவான் மற்றும் ரகானே இணை தரவில்லை.நேர்த்தியான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து விளையாடிக் கொண்டிருந்த இந்த இணையைப் பெங்களூர் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை.41 பந்தில் 6 பவுண்டரியை தெறிக்க விட்டு மூன்று போட்டிகளுக்குப் பின் அரைசதத்தைக் கடந்து அசத்தினார் தவான். ஆனால் ஷதாப் அகமது பந்துவீச்சில் துபேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் தவான்.
மறுபுறம் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரகானே வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு நிதானமாக ஆட்டத்தை நகர்த்திக் கொண்டிருந்தார். ஒருவேளை இவர்கள் 17 வது ஓவர் முடிவில் வெற்றி பெற்றிருந்தால் கூட பெங்களூர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கேள்விக் குறியாகி இருக்கும்.வெற்றி தான் பெற முடியவில்லை, குறைந்தபட்சம் நெருக்கடியாவது கொடுப்போம் என எண்ணி பந்து வீசினர் பெங்களூர் அணியினர். சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ரகானே 46 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சர் என 60 ரன்களை கடந்து, இந்த சீசனின் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
சுந்தர் வீசிய பந்தில் துபேவிடம் கேட்ச்சாகி வெளியேறினார் ரகானே. இறுதியில் டெல்லி அணி 19 வது ஓவர் முடிவில் இலக்கை எட்டி வெற்றிக்கனியைச் சுவைத்தது.டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.