ஐபிஎல் தொடரின் 13 வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, இருபது ஓவர் முடிவில் 156/7 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.இருபது ஓவர் முடிவில் 157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த சீசனில் இதுவரை சிறப்பாகச் செயல்படாத மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.
தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய டி-காக் அதிரடியாக இன்னிங்க்ஸை தொடங்கினார். ஆனால் 12 பந்தில் 20 ரன்களை எடுத்திருந்த போது அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.பின்னர் ரோகித்துடன், சூர்ய குமார் யாதவ் கைகோர்க்க இருவரும் ஆட்டத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 11வது ஓவரின் போது எதிர்பாராத விதமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் பந்தை ஆஃப் சைடு திசையில் அடித்து ரன் எடுக்க ஓடினார்.
எதிர்முனையில் நின்றிருந்த சூர்ய குமார் யாதவ் பந்து பீல்டரை நோக்கிச் சென்றதைக் கவனித்து, ரன் எடுக்க ஓடாமல் நின்று கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் ரோகித் மறுமுனைக்கு ஓடி வந்து விட்டார்.எனினும் சூர்ய குமார் யாதவ், கேப்டன் ரோகித் சிறப்பாக ஆடி கொண்டிருந்ததால் தனது விக்கெட்டை இழந்து கேப்டனுக்கு வாய்ப்பளித்து பெவிலியன் திரும்பினார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீசனில் சிறப்பான பார்மில் உள்ள யாதவ், கேப்டனுக்காக தனது விக்கெட்டை தாரை வார்த்தது மும்பை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே கொண்டாடப்பட்டு வருகிறது.தொடர்ந்து ஆடிய ரோகித் அதிரடியாக 68 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 5 ஐபிஎல் தொடரை வென்று சாதனை படைத்தது.