ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி!
ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசு ஃபோவாய் நிறுவனத்தின் மீது தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துவதற்கு ஃபோவாய் நிறுவனத்திற்கு வழங்கியிருந்த உரிமத்தை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி வரும் பெரும் நிறுவனங்களுள் ஒன்று ஃபோவாய்.
இந்நிலையில் ஃபோவாய் புதிய இயங்குதளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது கூகுளை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
'சாம்சங்' நிறுவனத்திற்கு அடுத்தபடி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான சாதனங்களை 'ஃபோவாய்' நிறுவனமே தயாரிக்கிறது. உலக சந்தையில் 17 விழுக்காடு அளவை கொண்டுள்ள ஃபோவாய் நிறுவன பயனர்களை இழக்க நேரிட்டால் கூகுள் பயனர் எண்ணிக்கையில் பல லட்சம் குறைந்து போகும் அபாயம் உள்ளது.
ஏனைய சீன தயாரிப்புகளான ஸோமி, ஆப்போ, விவோ, ரியல்மீ மற்றும் ஒன்பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களையும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு அரசு ஆணையிட்டால் சாம்சங் மட்டுமே ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் பெரிய நிறுவனமாக இருக்கும்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தக்கூடிய விளையாட்டு (கேம்) மற்றும் செயலிகள் பல சீனாவில் உருவாக்கப்படுபவையே. இந்த கேம் மற்றும் செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை புறக்கணிக்குமாறு சீன அரசு கேட்டுக்கொள்ளக்கூடும். அது நிகழ்ந்தால் கூகுள் நிறுவனம் பேரிழப்பை சந்திக்க நேரிடும்.
ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளில் ஃபோவாய் நிறுவனம் கணிசமான அளவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்நிறுவனம் தன் சாதனங்களுக்கென ஒரு வட்டத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. ஆகவே, கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த வட்டத்துக்கு நிகரான போட்டி உருவாகும்.
ஃபோவாய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்த பிறகு, கூகுள் நிறுவனம் சீனாவுக்குள் தான் நுழைவதற்கு செய்து வந்த முயற்சிகளை நிறுத்திவிட்டது. தற்போது ஹார்மனி இயங்குதளத்தை பற்றிய அறிவிப்பு வந்துள்ள நிலையில் சீனா குறித்த கூகுள் நிறுவனத்தின் முயற்சி முற்றிலுமாக தடைபடும் சூழல் எழுந்துள்ளது.
சொந்தமான மென்பொருள், சிப்செட், தொலைபேசி சாதனம் மற்றும் வாடிக்கையாளர் சேவை என்று முழுமையான நிறுவனமாக ஃபோவாய் விளங்குவதால் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு உண்மையாகவே சவாலாக விளங்கும்.
ஃபோவாய் பயனர்கள் ஹார்மனி இயங்குதளத்தை பயன்படுத்த தொடங்கினால் அவர்களுக்கான சேவைக்காக ஃபோவாய் நிறுவனத்திற்கு கூகுள் பணம் செலுத்த நேரிடலாம்.
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் உள்ளிட்ட சேவைகளை பாதுகாப்பான முறையில் பெற்றுத்தருவற்கு மூன்றாம் நபர் நிறுவனம் ஒன்றை ஃபோவாய் அமர்த்தக்கூடும். முறையற்ற விதத்தில் ஹார்மனி பயனர்கள் கூகுள் சேவைகளை பெற முயற்சித்தால் பாதுகாப்பு பிரச்னைகள் எழக்கூடும். அது கூகுளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடும்.