குழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன. உலகமே 'நல்லது' 'கெட்டது' என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே! அதில் அனைவரோடும் சேர்ந்து பார்க்கக்கூடியது முதல் யாருக்கும் தெரியாமல் மறைத்துப் பார்க்கக்கூடிய வீடியோக்கள் வரை அத்தனையும் உள்ளன.
உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் கணினியை வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறவே இயலாது. எல்லோருமே incognito போன்று இரகசியமாக பார்க்க உதவும் வழிகளை பயன்படுத்தமாட்டார்கள். திடீரென நீங்களே மற்றவர்களை ஏதாவது விவரங்களை பார்த்துக் கூறுமாறு கேட்கக்கூடும். அதுபோன்ற தருணங்களில், ஐயோ, அவர்கள் நாம் பார்த்த வீடியோக்களை தெரிந்து கொண்டிருப்பார்களோ என்ற அச்சம் நேராமல் இருப்பதற்கு, பார்த்த மற்றும் தேடிய வீடியோக்களின் விவரங்களை அழித்து விடலாம்.
யூடியூப் செயலி - வீடியோக்களின் விவரங்களை அழிக்கும் முறை
யூடியூப்பில் உள்ள தன் விவர (ப்ரொஃபைல்) படத்தின் மீது அழுத்தவும்
பின்பு கட்டமைப்பு (செட்டிங்ஸ்) தெரிவை அழுத்தவும்.
கீழே 'பார்த்தவை' (ஹிஸ்டரி) மற்றும் தனியுரிமை (ப்ரைவஸி) பகுதிக்குச் செல்லவும்
பார்த்தவற்றை அழிக்கவும் (கிளியர் வாட்ச் ஹிஸ்டரி) தெரிவை அழுத்தவும்
தேடியவற்றை அழிக்கவும் (கிளியர் சியர்ச் ஹிஸ்டரி) தெரிவை அழுத்தவும்.
இந்த வழிமுறையின் மூலம் நீங்கள் பார்த்த வீடியோக்களின் விவரங்கள் மட்டுமன்றி, எந்த வீடியோக்களை தேடினீர்கள் என்ற விவரங்களும் அழிந்துவிடும். உங்கள் கணக்கை கொண்டு நீங்கள் எந்த சாதனங்களில் பார்த்திருந்தாலும் தேடியிருந்தாலும் அவ்விவரங்கள் அழிக்கப்பட்டு விடும்.
இணைய யூடியூப் பயன்பாட்டு விவரங்களை அழிக்கும் வழிமுறை
YouTube.com தளத்தை திறந்து இடப்பக்கம் உள்ள 'நிகழ்ந்தவை' (ஹிஸ்டரி) தெரிவை அழுத்தவும்.
வலப்பக்கம் உள்ள 'பார்த்தவை' (வாட்ச் ஹிஸ்டரி) பகுதியை அழுத்தவும்
'பார்த்தவற்றை அழிக்கவும்' (கிளியர் ஆல் வாட்ச் ஹிஸ்டரி) என்பதை தெரிவு செய்யவும்.
வலக்கை பக்கமுள்ள 'தேடியவை' (சியர்ச் ஹிஸ்டரி) என்ற தெரிவை அழுத்தவும்.
'தேடியவற்றை அழிக்கவும்' (கிளியர் ஆல் சியர்ச் ஹிஸ்டரி) என்பதை தெரிவு செய்யவும்.
இதை செய்தபிறகு உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியை அவசர தேவைக்கு மற்றவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தாலும் மனதில் எந்தப் பயமும் இல்லாமல் இருக்கலாம்.