பப்ஜி மொபைல் கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பப்ஜி தடை செய்யப்பட்டதும் பல இந்திய நிறுவனங்கள் அதற்கு மாற்றாகப் பல விளையாட்டுகளை அறிமுகம் செய்து வருகின்றன.என்கோர் கேம்ஸ் நிறுவனம், ஃபாஜி FAU-G (Fearless And United: Guards)என்ற மொபைல் கேமை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் செயலி அழைப்பிற்கிணங்க தங்கள் நிறுவனம் மே-ஜூன் மாதங்களிலிருந்து இந்த விளையாட்டை வடிவமைத்து வருவதாகவும் ஃபாஜி அறிமுகமும் பப்ஜி தடையும் எதேச்சையாக ஒரே சமயத்தில் நிகழ்ந்துள்ளன என்றும் அந்நிறுவனத்தின் அதிகாரி விஷால் கோண்டல் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவ வீரர்களின் தியாகத்தைப் பற்றியது இவ்விளையாட்டு என்றும், பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் வழிகாட்டலில் இது வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அக்சய் குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் FAU-G கேமை அறிமுகம் செய்துள்ளார்.
கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவை இந்தியாவில் பப்ஜி கேமை நீக்கியுள்ளன. ஆனால் ஏற்கனவே தரவிறக்கம் செய்தவர்கள் இதை இன்னும் விளையாட முடியும்.பப்ஜி தடையைப் பயன்படுத்திப் பல இந்திய நிறுவனங்கள் அதற்கு மாற்றான விளையாட்டை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகின்றன. டிக்டாக் தடை செய்யப்பட்டபோது அதைப்போன்ற சிங்காரி, மித்ரன், ரோபோசோ, மோஜ் போன்ற பல செயலிகள் அதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.