குவா...குவா... சத்தம் கேட்க வெண்டைக்காய் சாப்பிடுங்க... இதயத்துக்கும் நல்லது

by SAM ASIR, Sep 14, 2020, 21:01 PM IST

வெண்டைக்காய் வாங்குவதை ஒரு கலையாகவே சிலர் பாவிப்பர். முனை காய்ந்து இருக்கக்கூடாது; புள்ளிகள் இருக்கக்கூடாது; முற்றலாய் இருக்கக்கூடாது என்றெல்லாம் கவனமாக பார்த்து வாங்குவர்.

பலருக்கு அதன் வழுவழுப்பான தன்மை பிடிப்பதில்லை. வெண்டைக்காயை அப்படியே சாப்பிடலாம். அதிக வெப்பத்தில் சமைத்தால் வழுவழுப்பு மறைந்துவிடும். ஏனைய காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் போதுமான வெப்பம் கிடைக்காததால் வழுவழுப்பு இருக்கக்கூடும். ஆகவே, வெண்டைக்காயை கூடுமானவரைக்கும் தனியாக சமைக்கவேண்டும். தக்காளி சாஸ் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருள்களுடன் சேர்த்து சமைத்தாலும் வழுவழுப்பு மறைந்துவிடும்.

வெண்டைக்காயிலுள்ள சத்துகள்

நூறு கிராம் பச்சை வெண்டைக்காயில் 33 கலோரி, 7 கிராம் கார்போஹைடிரேடு, 2 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளைக்கு தேவையானதில் 14 சதவீதம் மெக்னீசியம், 15 சதவீதம் ஃபோலேட், 14 சதவீதம் வைட்டமின் ஏ, 26 சதவீதம் வைட்டமின் சி, 26 சதவீதம் வைட்டமின் கே, 14 சதவீதம் வைட்டமின் பி6 ஆகிய சத்துகள் உள்ளன.

குழந்தை பாக்கியம்

குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வயதில் இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு 400 மில்லிசென்டிகிராம் ஃபோலேட் சாப்பிடுவது நல்லது. நன்கு ஆரோக்கியமான பெண்கள் 12,000 பேரிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பலர் நாளொன்றுக்கு குறைந்தது 245 மில்லிசென்டிகிராம் ஃபோலேட் எடுத்துக்கொள்வது தெரியவந்தது. ஃபோலேட் என்னும் வைட்டமின் பி9, கருவில் வளரும் குழந்தைக்கு முதுகெலும்பு மற்றும் மூளையில் எந்தக் குறைபாடும் வராமல் பாதுகாத்துக்கொள்ளும். வெண்டைக்காயில் வைட்டமின் பி9 (ஃபோலேட்) அதிக அளவில் காணப்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை

பொதுவாக நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிப்பது அவசியம். சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது, நீரிழிவு பாதிப்பு வரக்கூடும். செரிமான பாதையில் சர்க்கரையை உடல் கிரகித்துக்கொள்வதை வெண்டைக்காய் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆகவே, இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் நீரிழிவுக்கு மருந்து சாப்பிடுகிறவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இதை சாப்பிடலாம்.

இதய ஆரோக்கியம்

கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்போது இதய கோளாறுக்கான வாய்ப்பும் அதிகமாகிறது. வெண்டைக்காயின் வழுவழுப்புக்குக் காரணமான பசைபோன்ற பொருள், செரிமானத்தின்போது கொலஸ்ட்ராலை ஒன்றாய் சேர்க்கிறது. ஆகவே, அவை உடலால் கிரகிக்கப்படுவதற்கு பதிலாக கழிவுமண்டலம் வழியாக வெளியேறுகிறது. இவ்விதமாய் கொலஸ்ட்ராலை உடலைவிட்டு வெளியேற்றி இதய ஆரோக்கியத்திற்கு வெண்டைக்காய் உதவுகிறது.

வெண்டைக்காயில் பாலிபீனால் என்ற பொருள் அதிகம் உள்ளது. 1,100 பேரிடம் நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாலிபீனால் சாப்பிடுகிறவர்களுக்கு இதய பாதிப்பு குறைவு என்பது தெரிய வந்துள்ளது.

புற்றுநோய்

வெண்டைக்காயில் லெக்டின் எனப்படும் புரதம் உள்ளது. இது மனித உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மார்பக புற்றுநோய் குறித்த ஆய்வு குழாய் சோதனையில் இவ்வகை புற்றுநோய் செல் பாதிப்பை 63 சதவீதம் குறைக்கிறது. ஆனாலும் இது ஆய்வு நிலையில்தான் உள்ளது.

வெண்டைக்காயில் வைட்டமின்கள் சி மற்றும் கே1 ஆகியவை உள்ளன. வைட்டமின் சி, நீரில் கரையக்கூடியது. இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். வைட்டமின் கே1, கொழுப்பில் கரையக்கூடியது. இது இரத்தம் உறைதலுக்கு தேவைப்படும் சத்து ஆகும்.

வெண்டைக்காய் குறைந்த கலோரி கொண்டது என்பதுடன், புரதம், நார்ச்சத்து ஆகியவற்றையும் கொண்டது. பல பழங்கள், காய்கறிகளில் புரதம் இருக்காது. புரதத்தை கொண்டிருப்பதால் வெண்டைக்காய் தனித்தன்மை கொண்டதாகும். இதில் கொழுப்பு இல்லை என்பதும் சிறப்பானது.


More Aval News